Wednesday, 7 August 2019

ஏர்டெல் நிறுவனத்தின் முதல் காலாண்டு நஷ்டம் 2866 கோடி ரூபாய்கள்

ஏர்டெல் நிறுவனம், இந்த முதல் காலாண்டில், அதாவது 2019 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் , 2866 கோடி ரூபாய்கள் நஷ்டம் அடைந்துள்ளது. அந்த நிறுவனம் சென்ற ஆண்டு இதே காலாண்டில் 97 கோடி ரூபாய்கள் லாபத்தை அடைந்திருந்தது.

Tuesday, 16 July 2019

VIEW MEDIA NEWS :

BSNL/MTNL - GoM led by Shri.Amit Shah to meet today to discuss revival  (VIEW)

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கான தர்ணாவை வெற்றிகரமாக்கிடுவோம்!!

நாடு முழுவதும் BSNLல் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 6/7 மாதங்களாக ஊதியம் வழங்காத அவல நிலை நீடிக்கிறது. உடனடியாக அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என BSNL நிர்வாகத்தை வற்புறுத்தி 16.07.2019 அன்று BSNL ஊழியர் சங்கமும், TNTCWU அங்கமாக உள்ள BSNL CCWFம் இணைந்து மாநில தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்த அறைகூவல் விட்டுள்ளன. அதனடிப்படையில் தமிழகத்தில் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தமிழ் மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் தர்ணா நடைபெற உள்ளது. BSNL ஊழியர் சங்கம் என்றும் ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனைகளில் அவர்களோடு இணைந்து களம் கண்டு வருகிறது. தற்போது இவர்களுக்கு 6/7 மாத கால ஊதியம் இல்லாததை கணக்கில் கொண்டு அவர்களது போக்கு வரத்து ஏற்பாடு உள்ளிட்ட விஷயங்களை நமது BSNL ஊழியர் சங்கம் உடன் இருந்து வழிகாட்ட வேண்டும் என்றும், இந்த போராட்டத்தில் நமது தோழர்களும் பெரும் அளவில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

சிம் விற்பனையை அதிகப்படுத்துவோம் :

அன்பார்ந்த தோழர்களே,
BSNL நிறுவனம் மூடிவிடும் என தவறாக பொய்யை சொல்லிய JIOவின் முகவரின் மோசடிக்கு எதிராக நாம் ஒன்று பட்டு போராடி நம் எதிர்ப்பை பதிவு செய்தோம். இன்று BSNLஐ காக்க சிம் விற்பனைக்கான மேளாக்களை அனைத்து தொலைபேசி நிலையங்கள் முன்பாக நாம் உடனடியாக நடத்தி அதனை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வோம். அதற்காக தமிழக AUAB விடுத்த அறைகூவலை இத்துடன் இணைத்துள்ளோம்.

தோழர் M.முருகையா அவர்களின் படத்திறப்பு :

தமிழக K.G.போஸ் இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், தமிழக ஒப்பந்த தொழிலாளர் இயக்கத்தின் முக்கிய தலைவரும், தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தின் மாநில உதவிச் செயலாளராக மிகச்சிறப்பாக செயல்பட்டவருமான, மறைந்த அருமை தோழர் M.முருகையா அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 16.07.2019 அன்று காலை 10 மணிக்கு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தமிழ் மாநில தலைமை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறும். அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என  சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

செயல்பாட்டுக்கு தடை போடும் உத்தரவை திரும்பப் பெறக் கோரி நிர்வாகத்திற்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்

உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என 02.07.2019 தேதியிட்ட கடித எண்: BSNL/5-1/SR/2018 மூலமாக விண்ணப்பித்திருக்கும் அனைத்து சங்கங்களின் பொதுச்செயலாளர்களுக்கும் BSNL நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் அங்கீகாரம் 2019, மே மாதத்துடன் முடிவடைந்து விட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் விண்ணப்பித்திருக்கும் சங்கம், ஏதாவது போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்றால் அந்த சங்கத்தை உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை செய்யப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் மிரட்டல் விடப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் இந்த வாதம் பொருத்தமற்றது மட்டுமல்ல, நாட்டின் தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுவதும் ஆகும். இந்த அர்த்தமற்ற கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என நிர்வாகத்திற்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. பதிவு செய்யப்பட்ட சங்கம் என்ற அடிப்படையில், சட்டபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட BSNL ஊழியர் சங்கத்திற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. இது தொடர்பாக முதன்மை தொழிலாளர் நல ஆணையரிடமும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் எனில், தனது தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்க, BSNL ஊழியர் சங்கம் நீதிமன்றத்திற்கும் செல்லும்.

BSNL மற்றும் MTNLல் VRS திட்டத்தை அமலாக்கவும், ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆக குறைக்கவும் அரசு முன்மொழிவு :

BSNL மற்றும் MTNL ஆகியவற்றில் விருப்ப ஓய்வு திட்டத்தை அமலாக்கவும், அவற்றின் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆக குறைக்கவும் ஒரு அமைச்சரவைக் குறிப்பை தொலை தொடர்பு துறை முன்மொழிந்துள்ளதாக THE TIMES OF INDIA பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ஊழியர்களின் ஊதியத்திற்கான செலவை குறைப்பதற்காக, BSNLல் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவே, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதாம். இத்துடன் BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு, 4 G அலைக்கற்றைகளும் ஒதுக்கப்படுமாம். BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் நிலங்கள், டவர்கள் மற்றும் ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் ஆகியவற்றை பணமாக்கவும் அரசு முயற்சிப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. BSNL மற்றும் MTNL நிறுவனங்களை மூடுவதால், அரசிற்கு 1.2 லட்சம் கோடி ரூபாய்கள் செலவாகும் என்பதால், அரசு இவற்றை மூட விரும்பவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Wednesday, 19 June 2019

BSNLன் புதிய மனிதவள இயக்குனராக திரு அர்விந்த் வட்னெர்கர் அவர்களை PSEB பரிந்துரை

பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வு ஆணையமான PSEB திரு அர்விந்த் வட்னெர்கர் அவர்களை BSNLன் DIRECTOR (HR)ஆக பரிந்துரைத்துள்ளது. இதற்கான தேர்வு 14.06.2019 அன்று நடைபெற்றது. தற்போது பூனே மாவட்டத்தின் முதன்மை பொது மேலாளராக அவர் பணியாற்றி வருகின்றார். நேர்மையான அதிகாரியான அவர் நிறுவனத்தின் மீது பற்றுடையவர். திரு அர்விந்த் வட்னெர்கர் அவர்களை BSNL ஊழியர் சங்கம் மனதாரா வாழ்த்துகிறது.

19.06.2019 AUAB கூட்டம் நடைபெற உள்ளது.

19.06.2019  AUAB கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், 3வது ஊதிய மாற்றத்திற்காகவும், நமது BSNLன் புத்தாக்கம் தொடர்புடைய இதர கோரிக்கைகளுக்காகவும், நாம் கடைபிடிக்க வேண்டிய தந்திரோபயங்களை விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது. தற்போது நமது நிறுவனம் சந்தித்துக் கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்பாக தனி கவனத்துடன் இந்தக் கூட்டம் விவாதித்து நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்கும். 

Thursday, 13 June 2019

MoU signed between BSNL and Canara Bank.

Ever since the MoU between BSNL and Canara Bank expired, BSNLEU actively took up the issue with the Corporate Management, for the early renewal of the MoU. Due to certain difficulties the renewal of the MoU is delayed. The signing of the MoU has taken place with the Canara Bank. Efforts are on for the renewal of the MoU with the Union Bank of India.

BSNL ஊழியர் சங்கத்தின் விரிவடைந்த மத்திய செயற்குழு ஜூலை 29 முதல் 31வரை பூனே நகரில் நடைபெறும்.

12.06.2019 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டத்தில் நமது விரிவடைந்த மத்திய செயற்குழுவை பூனே நகரில் ஜூலை 29 முதல் 31 வரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாநில செயலாளர்கள், மத்திய சங்க நிர்வாகிகளுடன் அனைத்து மாவட்ட செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கு பெற வேண்டும். அவர்களுக்கும் சிறப்பு காசுவல் லீவ் உண்டு. BSNLன் இருத்தலே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள சூழலில் இந்த பூனே விரிவடைந்த மத்திய செயற்குழு நடைபெறுவதால் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாது பங்கேற்க வேண்டும். சார்பாளர் கட்டணம் ரூ.800/-. மாவட்ட செயலாளர்களின் பயணச் சீட்டு முன்பதிவினை மாநில சங்கங்கள் கவனிக்க வேண்டும். பூனேவில் நடைபெற உள்ள விரிவடைந்த மத்திய செயற்குழுவை முழு வெற்றி பெற செய்வோம். அந்த விரிவடைந்த மத்திய செயற்குழு நடைபெறுவதற்கு முதல் நாள், அதாவது 28.07.2019 அன்று பூனே நகரத்தில் அகில இந்திய BSNL WWCC கூட்டம் நடைபெறும். அதில் தமிழகத்தில் இருந்து BSNL WWCC அகில இந்திய அமைப்பாளர் தோழர் P.இந்திரா பங்கேற்பார்.

தமிழ் மாநில BSNL WWCC கூட்டம் :

தமிழ் மாநில BSNL உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் 25.06.2019 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள BSNL ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பை தமிழ் மாநில அமைப்பாளர் தோழர் பெர்லின் ஆலிஸ் மேரி அவர்கள் வெளியிட்டுள்ளார். தமிழ் மாநில BSNL WWCC உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை அந்தக் கூட்டத்திற்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து பணிகளையும் நமது மாவட்ட சங்கங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது.

ஒப்பந்த ஊழியர்களை குறைக்காதே! அவர்களின் ஊதியத்தை உடனே வழங்கு! BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை :

12.06.2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களும் துணை பொதுச்செயலாளர் தோழர் சுவபன் சக்கரவர்த்தி அவர்களும், DIRECTOR(FINANCE) திரு S.K.குப்தா அவர்களை சந்தித்து கீழ்கண்ட விஷயங்களை விவாதித்தனர். 
1) ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க மாநிலங்களுக்கு கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவு
2) மாதக்கணக்கில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு தரவேண்டிய ஊதிய பாக்கிக்கான நிதியை விரைவில் ஒதுக்க வேண்டும் என நமது தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது பராமரிப்பு பணிகளை கடுமையாக பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டினர்.
அதற்கு பதிலளித்த DIRECTOR(FINANCE) BSNLன் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் நிதி இருப்பை பொறுத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ள காரணத்தினாலேயே ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிர்பந்தம் வேறு வழியின்றி ஏற்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இருந்த போதிலும் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நமது தலைவர்கள் DIRECTOR (FINANCE) அவர்களிடம் வற்புறுத்தி உள்ளனர்.

Wednesday, 8 May 2019

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கான போராட்டங்களை வெற்றிகரமாக்குவோம்!!

ஒப்பந்த ஊழியர்களுக்கு பல இடங்களில் கடந்த நான்கு மாத ஊதியம் நிலுவையில் உள்ளது. காரணம் கேட்டால் நிதி இல்லை என்கிற பதில் தான் வருகிறது. பதில் பசியை போக்காது. உடனடியாக ஊதியம் வேண்டும் என வலியுறுத்தி 08.05.2019 அன்று மாவட்டங்களில் மாவட்ட பொது மேலாளர்களிடம் முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில் நமது BSNL ஊழியர் சங்க தோழர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும். அதன் பின்னரும் ஊதியம் தரப்படவில்லை எனில் 13.05.2019 முதல் TNTCWU மற்றும் BSNLEU மாநில சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் மூன்று நாட்கள் உண்ணாவிரத போராட்டம் சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும். மூன்றாம் நாளான 15.05.2019 அன்று தமிழகம் முழுவதும் இருந்து திரளும் நிரந்தர, ஒப்பந்த மற்றும் ஓய்வு பெற்ற தோழர்களும் பங்கேற்கும் பிரமாண்டமான பெருந்திரள் உண்ணாவிரத போராட்டமாக நடைபெறும். எனவே 13.05.2019 முதல் நமது மாநில சங்க நிர்வாகிகளும், 15.05.2019 அன்று நமது அனைத்து தோழர்களும் சென்னையை நோக்கி திரண்டு வரவேண்டுமென தோழமையுடன் தமிழ் மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது.

கூட்டுறவு சங்கத்திற்கு பணம் ஒரு வழி பாதையிலா? 2019, மே 9ஆம் தேதி சொசைட்டி கிளைகளில் முறையிடுவோம்

கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உடனடியாக டிவிடெண்ட், கடன் வழங்க கோரியும், ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தாருக்கும், கணக்கை முடித்துக் கொண்டவர்களுக்கு உடனடியாக பணத்தை திரும்ப தரக் கோரியும், சொசைட்டி நிலத்தை பாதுகாக்க கோரியும் கூட்டுறவு சங்கத்தின் கிளைகளில் பெருந்திரள் முறையீடு  << மேலும் படிக்க >>

Wednesday, 1 May 2019

அனைவருக்கும் ”மே தின” வாழ்த்துக்கள்.

உழைக்கும் மக்களின் திருநாளாம் இந்த மே தினத்தில் அனைவருக்கும் தனது புரட்சிகரமான வாழ்த்துக்களை  BSNL ஊழியர் உரித்தாக்குகிறது.





BSNL நிறுவனத்திற்கு FINANCE, EB மற்றும் CM பிரிவுகளுக்கான தற்காலிக இயக்குனர்களை தொலை தொடர்பு துறை நியமித்துள்ளது.

FINANCE மற்றும் CM பிரிவுகளுக்கான இயக்குனர் பதவிகள் நீண்ட காலமாக காலியாகவே இருந்தது. DIRECTOR(EB) பதவி சமீபத்தில் காலியானது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாங்கம் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நிர்வாகத்தின் செயல்திறன் குறைந்தது. 2019 பிப்ரவரி 18 முதல் நடைபெற்ற மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தின் ஒரு கோரிக்கையாக இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என AUAB முன்வைத்திருந்தது. 
இறுதியில் தற்போது அரசாங்கம் இடைக்காலமாக இந்த பணியிடங்களை நிரப்பி உள்ளது. திரு சுரேஷ் குமார் குப்தா அவர்களை DIRECTOR (FINANCE)ஆகவும், திரு பன்வாரிலால் வர்ஷ்னே அவர்களை DIRECTOR (EB)ஆகவும் திரு ஷீட்லா பிரசாத் அவர்களை DIRECTOR (CM)ஆகவும் கூடுதலாக கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிரந்தரமான இயக்குனர்கள் நியமிக்கப்படும் வரை அல்லது மூன்று மாத காலத்திற்கு இவர்கல் இந்த பதவிகளில் பணியாற்றுவார்கள்

8ஆவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டுமென்றும், அதனை ஒத்திப்போடுவதை எதிர்த்தும் BSNLEU மற்றும் NFTE கடிதம்

8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான பணிகளை உடனே துவங்க வேண்டும் என BSNLல் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு ஊழியர் சங்கங்களான BSNLEU மற்றும் NFTE ஆகியவை இணைந்து, BSNL CMDக்கு கடிதம் எழுதியுள்ளன. 6 மாத காலத்திற்கு 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை ஒத்தி வைக்க நிர்வாகம் முயற்சி எடுத்துள்ள பின்னணியில் இந்த கடிதம் வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை ஒத்தி வைப்பதற்கு இரண்டு சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன.

ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை மீண்டும் துவங்கிட வேண்டும்

ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கான பேச்சு வார்த்தைகள் மீண்டும் துவக்கப்பட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துக் கொண்டுள்ளது. 08.04.2019 அன்று மனிதவள இயக்குனருடன் நடைபெற்ற முறையான சந்திப்பின் போது இந்த பிரச்சனை மீண்டும் எழுப்பப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையை மீண்டும் துவக்க BSNL நிர்வாகம் விரும்புகிறது என்று DoTக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என GM(SR)க்கு மனித வள இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். 
இது தொடர்பாக 25.04.2019 அன்று GM(SR) திரு A.M. குப்தா அவர்களை தோழர் P.அபிமன்யு அவர்கள் சந்தித்து விசாரித்தார். கார்ப்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு இதுவரை DoTக்கு கடிதம் எழுத வில்லை என தெரிய வந்தது. இந்த பணியினை விரைவில் செய்து முடித்து ஊதிய பேச்சு வார்த்தையை விரைவில் நடத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் GM(SR) அவர்களை வற்புறுத்தி உள்ளார்.

வங்கிக் கடன்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் புதுப்பிப்பு :

கனரா வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றோடு ஊழியர்களுக்கு கடன் வழங்க போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காலாவதியாகி போனதை தொடர்ந்து அவற்றை புதுப்பிக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துக் கொண்டுள்ளது. 25.04.2019 அன்றும் இந்த விஷயத்தை கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள DGM(Banking) அவர்களிடம் விவாதிக்கப்பட்டது. கார்ப்பரேட் அலுவலகம் அந்த பணியில் வேகமாக இறங்கியுள்ளதாகவும், ஒரு வார காலத்திற்குள் புதுப்பிக்கப்படலாம் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

BSNL ஏன் இன்னமும் 4G சேவை வழங்கவில்லை- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி?

BSNL நிறுவனம் இன்னமும் ஏன் 4G சேவை வழங்கவில்லை என தொலை தொடர்பு துறைக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை அமர்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வெங்கடேஷ் என்பவர் இதற்கு மனு தாக்கல் செய்துள்ளார். அனைத்து தனியார் நிறுவனங்களும் 4G சேவையை துவங்கி விட்ட பின்னரும் BSNLக்கு ஏன் இன்னமும் இந்த சேவை வழங்கப்படவில்லை. BSNL இன்னமும் 4G சேவை தராமல் காலம் தாழ்த்துவதால், தனியார் நிறுவனங்கள் ஆதாயம் பெறுகிறார்கள் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார். எனவே உயர் நீதிமன்றம் BSNL நிறுவனம் விரைவில் 4G சேவையை துவங்கிட அரசிற்கும், BSNL நிறுவனத்திற்கும் உத்தரவிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மனுதாரரின் முயற்சிக்கு BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது

8வது உறுப்பினர் சரி பார்ப்பு :

பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி BSNL நிர்வாகம் 8வது உறுப்பினர் சரி பார்ப்பு தேர்தலை தள்ளி வைத்து 18.03.2019 அன்று ஒரு கடிதம் வெளியிட்டிருந்தது. நிறுவனத்தின் நிலையை கணக்கில் கொண்டு 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை BSNL நிர்வாகம், மேலும் 6 மாத காலத்திற்கு ஒத்தி வைக்கலாம். 23.04.2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களும், தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS அவர்களும் GM(SR) திரு A.M.குப்தா அவர்களை சந்தித்து உரையாடிய போது அவர்களால் அதனை புரிந்துக் கொள்ள முடிந்திருக்கிறது. இதனை முன்கூட்டியே அனுமானித்த BSNL ஊழியர் சங்கம் தனது காசியாபாத் மத்திய செயற்குழுவில், இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டது என்றால் மத்திய செயற்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை அப்போது கேட்டு அகில இந்திய மையக் கூட்டம் முடிவு செய்யலாம் என முடிவெடுத்திருந்தது. 
24.04.2019 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டத்தில் நிர்வாகத்தின் இந்த முன்மொழிவு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடைபெற வேண்டும் என அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிதி நிலையை காரணம் காட்டி உறுப்பினர் சரி பார்ப்பு தேர்தலை ஒத்தி வைப்பதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் மற்றும் BSNLன் பொருளாதார புத்தாக்கம் ஆகிய முக்கியமான விஷயங்கள் தொடர்பாக புதிய அரசாங்கத்திடம் வலுவாக வாதிட தொழிற்சங்க அங்கீகாரம் மிக மிக முக்கியமான விஷயம். எனினும் மத்திய சங்கம் மத்திய செயற்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கோரியுள்ளது. வந்தவுடன் அதற்கேற்ப நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கப்படும்.

Monday, 22 April 2019

”BSNLஐ பாதுகாப்போம்- 
தேசத்தை பாதுகாப்போம்” 

தெருமுனைக் கூட்டங்கள்:
வேலூர் மாவட்ட BSNLEU  ஊழியர் சங்கம் சார்பாக  தெருமுனை பிரச்சார இயக்கம் 22.04.2019 வே லூர் புதிய பஸ் நிலையத்தில் 1000 நோட்டிஸ்கள் வினியோகிக்கபட்டது.










பிப்ரவரி, 2019ல் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் BSNL ஆகிய இரண்டு நிறுவனங்களில் மட்டும் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

TRAI வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் BSNL ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே பிப்ரவரி, 2019ல் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளன. வொடோபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. 2019 பிப்ரவரியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 77.93 லட்சம் வாடிக்கையாளர்களையும், BSNL 8.99 லட்சம் வாடிக்கையாளர்களையும் சேர்த்துள்ளன. வோடோபோன் ஐடியா 57.87 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 49,896 வாடிக்கையாளர்களையும் இந்த மாதத்தில் மட்டும் இழந்துள்ளன.

தனது இணையதள வேகத்தை BSNL அதிகரித்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் BSNLன் இணைய தள வேகம் 7% உயர்ந்துள்ளது என OPEN SIGNAL என்கிற நிறுவனம் 01.12.2018 முதல் 28.02.2019 வரை நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் வேகத்திற்கு இதனால் ஈடு கொடுக்க இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின் படி பாரதி ஏர்டெல் வேகமான வலைத்தளத்தையும், அதனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடோபோன் ஐடியா ஆகியவையும் உள்ளனவாம்.